மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் துரை முருகன்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது .
இந்தக் கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்துகொண்டு என்னென்ன கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளன என்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ”மேகதாது அணை கட்டுவதற்கு பசுமை தீர்ப்பாயம் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கு விரைவில் வரக்கூடிய உள்ளது.
அதற்குள் கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதிக்காது அதற்கான முழு முயற்சியை அரசு எடுக்கும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியும் மற்றும் ராணிப்பேட்டையில் ஒரு மருத்துவக் கல்லூரியும் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகளவில் படித்த இளைஞர்கள் உள்ள நிலையில் கொரோனா காலகட்டம் முடிந்தவுடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இடம் இதைப் பற்றி எடுத்துரைத்து இப்பகுதியில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க படித்துள்ள டாக்டர்கள், செவிலியர்கள் உடனடியாக கொரோனா காலகட்டத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலத்தில் ஏரிகளை தூர்வாருவதில் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கு எழுந்துள்ள நிலையில், இந்த முறை மூத்த ஐ.ஏ எஸ் அதிகாரிகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமனம் செய்து நானும் விவசாயத்துறை அமைச்சர் பன்னீர்செல்வமும் நேரடியாக கண்காணித்து ஏரி மற்றும் குளம் ஆகியவற்றை தூர்வாரும் பணியில் ஈடுபடுவோம்” எனக் கூறினார்.