குறைவான விலையில் தக்காளி வேணுமா? - எங்கே கிடைக்கும் என தமிழக அரசு அறிவிப்பு

tomato tngovernment ministeraiperiyasamy
By Petchi Avudaiappan Nov 23, 2021 05:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் தக்காளி விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையால் காய்கறி வரத்து குறைந்து விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் தக்காளியைப் பதுக்கி அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயர்ந்து வருவதால், அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தினசரி தேவைக்கான காய்கறிகள் வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக டியுசிஎஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் உட்பட 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து காய்கறிகளும் (குறிப்பாக தக்காளி) விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 வெளிச்சந்தையில் தற்போது ரூ. 110 முதல் ரூ130 வரை விற்கப்பட்டு வரும் தக்காளி, கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை குறைவான விலையில் தரமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 MT தக்காளி கொள்முதல் செய்யவும், இதனை படிப்படியாக உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது  என தெரிவித்துள்ளார்.