ரேஷன் அரிசியை விற்பனை செய்தால்... தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

madurai high court
By Fathima Aug 26, 2021 04:37 AM GMT
Report

போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு ஒழிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

கன்னியாகுமரியைச் சேர்ந்த குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேரந்த பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, சட்டவிரோதமாக கேரளாவிற்குக் கொண்டு சென்றதாக குழித்துறை போலீசார் தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தன்னிடம் இருந்து ரூ.1.24 லட்சம் மதிப்புள்ள 22 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளதாக வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, மனுதாரருக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கியிருந்தார். மேலும், மனுதாரரிடம் இருந்து எப்படி ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த அரிசி ரேஷனில் வழங்கப்பட்ட அரிசி என்பது எப்படி அடையாளம் காணப்படுகிறது என்பது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கையளிக்க உத்தரவிட்டிருந்தார்.  

அதன்படி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ரேஷன் கார்டுகளில் ஆதார் இணைக்கப்பட்டு கைரேகை பதிவின் மூலம் பொருட்கள் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளது.

ரேஷன் அரிசியை விற்பனை செய்வோரின் குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.

போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு ஒழிக்கப்படுகிறது, மே 7க்கு பிறகு புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட பலவற்றிலும் துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு சிறப்பு குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.