விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணமா? மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தியான இன்று நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 1,50,000 விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
சிலை கரைக்க கட்டணம்
விநாயகர் சதுர்த்தியின் போது நிறுவப்பட்ட சிலைகள் ஒரு வாரத்திற்கு பின் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். நீர் நிலைகளை மாசு படுத்தா வண்ணம் சிலைகளை கரைக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி சிலைகளை கரைப்பதற்கு கட்டணம் வசூலளிக்க உள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் இதற்கு அரசு தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை தீர்ப்பாயம்
இந்நிலையில், பசுமை தீர்ப்பாயம் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக, சிலைகளை கரைக்க அனுமதி கோருபவர்களிடம் இருந்து, சிலையில் அளவுக்கு ஏற்றவாறு வசூலிப்பதற்கான கட்டணத்தைக் கூட்டுக்குழு நிர்ணயிக்க வேண்டும் எனவும், அரசால் அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலையை கரைத்தால் அபராதம் விதிக்க வேண்டும் எனவும், இத்தொகையை, தொடர்புடைய நீர்நிலையைப் பராமரிக்க செலவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
அதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், சிலைகளைக் கரைக்கக் கட்டணம் நிர்ணயிப்பது மற்றும் அபராதம் விதிப்பதை பொறுத்தவரை பொதுமக்களின் மத வழிபாட்டு உரிமை மற்றும் உணர்வு சார்ந்தது என்பதால் அதை செயல்படுத்த சட்டரீதியான செயல்முறை தேவைப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் கருதி, சிலைகளைக் கரைக்கும்போது ஏற்படும் மாசுவை கண்காணிக்க பொதுமக்கள் பங்களிப்பை தீவிரப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.