பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படாது - தமிழக அரசு புதிய அறிவிப்பு
நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை மஞ்சள் பையில் வைத்து, முழு கரும்பு ஒன்றும் சேர்த்து பொங்கல் பரிசுத்தொகுப்பாக அனைத்து ரேஷன் கடைகள் மூலம் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி கடந்த ஜனவரி 4 ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு வரும் நாளை (ஜனவரி 9 ஆம் தேதி) முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்நிலையில் அன்றைய தினம் நியாய விலைக்கடைகள் செயல்படாது என்றும், பொங்கல் பரிசுகள் அன்றைய தினம் வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற முடியாவிட்டாலும் பொங்கலுக்கு முன்பாக கடைக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம். இக்காலகட்டத்திற்குள் தவிர்க்க இயலாத காரணங்களினால் பொருள்கள் தொகுப்பினைப் பெற இயலாதவர்கள் இம்மாத இறுதிவரை அதாவது ஜனவரி 31 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பொருட்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் 18005993540 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.