மகளிர் உரிமை தொகை பெறாதவர்களா நீங்கள்? - துணை முதல்வர் சொன்ன குட் நியூஸ்
மகளிர் உரிமை தொகை குறித்த அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை
2021 சட்டமன்ற தேர்தலின் போது, திமுகவின் தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக, 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மகளிர் அதிருப்தி
இந்த திட்டத்தின் படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது, 1 கோடியே 14 லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலம் உரிமைத்தொகையை பெற்று வருகிறார்கள்.
சமீபத்தில், சுமார் 1.27 லட்சம் பயனாளிகள் பல்வேறு காரணங்களால் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், இதுவரை மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்களும் அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர்.
பட்ஜெட்டில் வரும் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில், அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "அடுத்த 2 மாதங்களுக்குள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை ரூ.1,000 வழங்கப்படும்" என பேசினார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் மார்ச் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் அறிவிப்பில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil
