ஜல்லிக்கட்டு போட்டியை காண வாருங்கள்.. நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஜல்லிக்கட்டு வழக்கு
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது எந்தெந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது என நீதிபதிகளுக்கு எடுத்துரைத்தார்.

குறிப்பாக காளைகள் என்பது 6 வயது வரைக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மேல் ஓய்வு கொடுக்கப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளையின் திமிலை ஒருவர் பிடித்துவிட்டால் மற்றவர்கள் அனைவரும் ஒதுங்கிவிடுவார்கள்.
15 மீட்டர்குள்ளாகவே அந்த காளை என்பது பிடிக்கப்பட வேண்டும். அதன்பிறகு காளையின் உரிமையாளர் அந்த காளையை அழைத்துச் சென்று விடுவார்.
சாராயம் கொடுப்பதோ அல்லது கண்களில் மிளகாய் பொடிகளை போடுவது போன்றவை எல்லாம் செய்யப்படாது. காளை என்பது குடும்பத்தின் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறது.
எனவே இந்த பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சொல்லக் கூடிய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது. ஒரு காலத்தில் அப்படி ஒரு சம்பவங்கள் நிகழ்ந்தாலும் தற்போது தமிழக அரசு பல விதிமுறைகளை விதித்து அதை கடைப்பிடித்தே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
நீதிபதிகளுக்கு அழைப்பு
அப்போது நீதிபதி விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதை நாங்களும் பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். அதற்கு தமிழக அரசு வழக்கறிஞர் கபில் சிபில், ஜல்லிக்கட்டு போட்டியை காண உச்சநீதிமன்ற நீதிபதிகளை அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்த பிறகு நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டியை காணலாம் என தெரிவித்தார்.
அப்போது நீதிமன்றத்தில் சிறிது சிறிப்பலை என்பது ஏற்பட்டது. தொடர்ந்து வழக்கின் விசாரணையின் நடைபெற்று வருகிறது.