பட்டின பிரவேசம் நிகழ்ச்சியில் தலையிடுவதா? - தமிழக அரசுக்கு குஷ்பு கடும் கண்டனம்

Khushbu Government of Tamil Nadu BJP
By Petchi Avudaiappan May 04, 2022 09:51 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பட்டின பிரவேசம் நிகழ்ச்சியில் தமிழக அரசு தலையிடுவது குறித்து நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் ஏற்றி சுமந்து செல்வது வழக்கமாக உள்ளது. இதனிடையே இம்மாத இறுதியில் (மே 22) நடக்கவுள்ள தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதற்கிடையில் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த நிகழ்வை வைத்து சிலர் அரசியல் செய்ய முயல்வதாகவும், நீதிமன்றத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தருமபுரம் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்துள்ளது தமிழக நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு எதிரானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பட்டின பிரவேசம் நிகழ்ச்சியில் தமிழக அரசு தலையிடுவது இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் தமிழக அரசு இந்துக்களை மகிழ்விக்க அனைத்து செய்களிலும் ஈடுபடுகிறது. குடும்ப உறுப்பினர்கள் கோவில்களில் பூஜைகளில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வலம் வருகிறது.

ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இந்துக்களின் பாரம்பரியத்திற்கு எதிராக அவர்கள் செயல்படுகின்றனர். பட்டின பிரவேசம் நிகழ்ச்சியில் தமிழக அரசு தலையிடுவது இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.