தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
ஒமைக்ரான் வைரஸ் பரவலால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகளை படாதபாடு படுத்தி வரும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தற்போது ஒமிக்ரான் வைரஸாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 30 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவ ஆரம்பித்து 20 நாட்களை கடந்துள்ளதாக தெரிவித்தார். இந்த 20 நாட்களில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுகிறதே தவிர, இதன் வீரியம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதுதொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதிக ஆபத்து நிறைந்த நாடுகள், பாதிப்பு இல்லாத நாடுகள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இருந்து வருகை புரிவோர் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு உரிய பரிசோதனைக்கு பின் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து போக்குவரத்திற்கு தடை, முழு ஊரடங்கு அமல் போன்றவற்றிற்கான சூழல் தமிழகத்திற்கு தற்போது இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

தமிழர் படுகொலை - காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகள் : மறைக்கப்படும் உண்மைகள் IBC Tamil
