தமிழக அரசின் பொங்கல் பரிசுப்பொருள் வழங்கப்படும் தேதி அறிவிப்பு - மகிழ்ச்சியில் மக்கள்
ரேஷன் கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் அறிவித்தார்.
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் அடங்கிய இந்த சிறப்பு தொகுப்பு ரூ. 1,088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதேபோல் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்போது கொரோனா காலம் என்பதால் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறை கொண்டு வரப்பட்டு சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்றும், சிறப்பு தொகுப்பு அனைவருக்கும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு தொகுப்பு பொருட்களுடன் ரூ.2,000 ரொக்க பணமும் வழங்கப்பட்டது. இந்த முறை சிறப்பு தொகுப்பு பொருட்களுடன் ரூ.5,000 வழங்க வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் ரொக்க பணம் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.