ரேஷன் கடையில் கைரேகைப் பதிவு அவசியம்; அரசு புதிய உத்தரவு - கவனிச்சீங்களா?
ரேஷன் கடையில் கைரேகைப் பதிவு குறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ரேஷன் கடை
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைத்துள்ளனர். அதேபோல, அவர்களின் கைரேகைப் பதிவு மூலமாகவே ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
தொடர்ந்து, ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு கைரேகைப் பதிவு செய்வதை அரசு கட்டாயமாக்கியது. ரேஷன் கார்டு ஒரு ஊரில் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் வெளியூரில் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் அரசு கடுமையான உத்தரவை வழங்கியுள்ளதாக புகார்கள் எழுந்தது.
கைரேகைப் பதிவு
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறைத் தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் சக்கரபாணி முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்களின் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களையும் கடைக்கு வந்து தான் கைவிரல் ரேகைப் பதிவு செய்ய வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கைரேகைப் பதிவு விஷயத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.