22 வருசமா சீரழிச்சது...ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கமுடியாது..தமிழக அரசு திட்டவட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக செயல்பட அனுமதிக்க முடியாது என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரம்
கடந்த 2018-ம் ஆண்டு வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுவதாக, அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. ஆனால், இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தியும், ஆலையிலுள்ள கழிவுகளை அகற்ற அனுமதி வழங்குவது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில், அந்த கழிவுகளை தமிழக அரசே அகற்றும் என்றும், அதற்கான செலவுகளை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி கலெக்டர் மேற்பார்வையில், சப்-கலெக்டர் தலைமையில் பல்வேறு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் முதல் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்ற வழக்கு
இதனிடையே, ஆலையை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அரசாணைகள், ஆவணங்கள் மற்றும் குறுகிய எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எழுத்துப்பூர்வமாக 25 பக்க அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனம் சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி உள்ளது என்றும் அடிப்படையான விதிமுறைகளை கூட அந்நிறுவனம் பின்பற்றவில்லை என்பதுடன் இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்து, ஸ்டெர்லைட் நிறுவனத்தை செயல்பட அனுமதிக்க இயலாது என தெரிவித்துள்ளது.