ஆண்டின் முதல் கூட்டத்தொடர்..சட்டப்பேரவைக்கு வந்த வேகத்தில் வெளியேறிய ஆளுநர் -நடந்தது என்ன?
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை
தமிழ் நாட்டுச் சட்டப்பேரவை முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு வந்த தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவைச் செயலர் , சபாநாயகர் அப்பாவு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பிறகு அவைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சிறிது நேரத்திலேயே வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முன்னதாக தமிழக சட்டப்பேரவை இன்று காலை தேசிய கீதம் இசைக்க ஆளுநர் வலியுறுத்தியதாகவும்,
ஆனால் அதனைவிடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதால் ஆளுநர் அவையிலிருந்து வெளியேறியது தெரியவந்துள்ளது.இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில்,தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது.
ஆளுநர் ரவி
தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். இது அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் மாளிகைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு சபாநாயகர் அவர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையிலிருந்து வெளியேறினார் ஆளுநர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.