நீட் நுழைவுத் தேர்வு, இருமொழிக் கொள்கை குறித்து ஆளுநர் சட்டப்பேரவையில் பேச்சு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவானர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. வணக்கம் தெரிவித்து சட்டப்பேரவையில் தன் உரையை தமிழக ஆளுநர் ரவி தொடங்கினார்.
பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய ஆளுநர், நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என தனது உரையில் தெரிவித்தார்.
நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது. நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தொடர்வதில் அரசு உறுதியுடன் உள்ளது எனவும், தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதியின் கனவை நனவாக்கும் விதமாக அனைத்து சாதியினரையும் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்கள் ஆக்கியுள்ளது என புகழாரம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் தர தமிழக அரசு முனைந்திருக்கிறது, தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையையே தமிழ்நாடு அரசு பின்பற்றும் என கூறினார்.