ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 ரூபாய் கடன் சுமை - வெள்ளை அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

PTR Palanivel Thiagarajan White Paper
By Thahir Aug 09, 2021 07:19 AM GMT
Report

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 ரூபாய் கடன் சுமை உள்ளது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 ரூபாய் கடன் சுமை - வெள்ளை அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்! | Tn Government White Paper Ptr

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்பேரில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் செயலாளர்கள் தெரிவித்த திருத்தங்களும் இடம்பெற்றுள்ளன. 2001ல் அதிமுக அமைச்சர் பொன்னையன் வெளியிட்ட அறிக்கை, துறைவாரியாக விரிவாக இல்லை.

வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு என்பதற்காகவே என் பெயர் இடம்பெற்றுள்ளது. எங்களின் இலக்கை தெரிவிப்பதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம்.

அ.தி.மு.க ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2011-16ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறையாக ரூ.17ஆயிரம் கோடியாக இருந்தது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது.

2016-21-ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50லட்சம் கோடியாக உயர்ந்ததுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், நினைத்துப் பார்க்க முடியாத அளவில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடனை வாங்கி கட்டாயச் செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதிநிலைமை சரிந்துவிட்டது. 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இல்லை.

மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. மின்வாரியத்தில் கடனை திருப்பிச்செலுத்தும் தன்மை குறைந்து, வட்டி அதிகரித்துள்ளது. கடன்களின் நிலை மற்றும் வருமானம், செலவினம் ஆகியவை எவ்வாறு மாறியுள்ளன என்பது வெள்ளை அறிக்கையில் உள்ளது.

மாநிலத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதையும் விளக்கியுள்ளோம். தமிழகத்தின் வருவாய் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. முந்தைய திமுக ஆட்சியில் வருமானம் உபரியாக இருந்தது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.