தமிழகத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்?: நாளை அவசர ஆலோசனை
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை விஸ்வரூபம் ஆடி வருகிறது. நேற்று உச்சபட்சமாக 2 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் மட்டும் 7,800-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியானது.
நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை (ஏப். 15) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
ஏற்கனவே கடந்த 10-ம் தேதி முதல் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் தற்போது அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதில் தமிழகத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்று தெரிகிறது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு கொண்டு வருவதற்கான தேவை தற்போது இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.