தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு - வெளியான முக்கிய அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

tngovernment pongalgiftpackage
By Petchi Avudaiappan Dec 22, 2021 09:43 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழக அரசின் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு மற்றும் முழு கரும்பை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகிய பொங்கலுக்கான பொருட்கள் மற்றும் மளிகை என 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு. கரும்பு ஆகியவை 2 .15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ.1088.17 கோடியில் வழங்கப்படுகிறது.

இப்பொருட்களை நியாயவிலைக்கடைகள் மூலம் விநியோகிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் உள்ள 20 பொருட்களில் முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை மட்டும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கொள்முதல் செய்து விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தகுதியுள்ள குடும்ப அட்டைகளின் பட்டியலை பெற்று பச்சரிசி, சர்க்கரை மற்றும் துணிப்பை ஆகியவற்றை தமிழக நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை பிளாஸ்டிக் உறைகளுக்கு பதில், பழுப்பு நிற காகித உறைகளில் மட்டுமே பொட்டலமிட்டு, விநியோகிக்க வேண்டும் என்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டிய நாட்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்ட அன்றில் இருந்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விநியோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பொங்கல் பரிசு தொகுப்பை ஒரே தவணையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியே்ாகிக்க வேண்டும் என்றும் எக்காரணத்தை கொண்டும் பொருட்கள் இல்லை என அட்டைதாரர்களை திருப்பியனுப்பக்கூடாது எனவும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கும் நாட்களில் கடைகளை உரிய நேரத்தில் திறக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து உடன் உரிய பொருட்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயிரம் குடும்ப அட்டைகள் வரை உள்ள நியாயவிலைக்கடைகளில் இரு பணியாளர்களும், அதற்கு மேல் உள்ள கடைகளில் 3 பணியாளர்களும் பொங்கல் தொகுப்பை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் எவ்வித புகாருக்கும் இடமின்றி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.