27 மாவட்டங்களில் நகர பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு?
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் அரசு நகர பேருந்துகள் இயக்க தமிழக அரசு சார்பில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழக அரசு கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது. அதில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது.குறிப்பாக, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் கட்டுபாடுகளுடன் ஊரடங்கும், தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடனும் ஊரடங்கு ஜூன் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜூன் 21ம் தேதிக்கு பின் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் நகர பேருந்து சேவையை கட்டுப்பாடுகளுடன் துவங்க தமிழக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைவரும் 21ம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், பணிமனைகளில் அதிகளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், வரும் வாரத்திற்குள் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.