பெரியார் சாலையைத் தொடர்ந்து அண்ணா, காமராஜர் சாலைகளின் பெயர்கள் மாற்றமா? புதிய சர்ச்சை

anna veeramani periyar kamarajar ttv dinakaran
By mohanelango Apr 14, 2021 08:22 AM GMT
Report

சென்னையில் உள்ள ஈ.வே.ரா பெரியார் சாலையின் பெயர் சமீபத்தில் கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு எனப் பெயர் மாற்றப்பட்டிருந்து. அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

புதிதாக மாற்றம் செய்யப்பட்ட பெயரை திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர்கள் தார் ஊற்றி மறைத்தனர்.

இந்நிலையில் தற்போது அரசு ஆவணங்களில் அண்ணா மற்றும் காமராஜர் சாலைகளின் பெயரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்கு டிடிவி தினகரன், கி. வீரமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். டிடிவி தினகரன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்?

உடனடியாக இந்த உத்தரவுகளை திரும்பப் பெற்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரிலேயே அந்தந்த சாலைகள் தொடர்ந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.” என்றுள்ளார்.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி தன்னுடைய கண்டன அறிக்கையில், “நேற்று (13.4.2021) நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையில் ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயர் மாற்றப்பட்ட கொடுமையைப் போலவே, ‘அண்ணா சாலை’யின் பெயரும் ‘கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு’ என்றும், சென்னை காமராசர் சாலை (கடற்கரை சாலை)யின் பெயரும் ‘கிராண்ட் நார்தென் டிரங்க் ரோடு’ என்றும் குறிக்கப்பட்டிருப்பதாக நமக்கு சில தகவல்கள் வந்துள்ளன.

அதாவது ‘மவுண்ட் ரோடு’ என்பது ‘அண்ணா சாலை’ என்று மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் பெரியாருக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அண்ணாவுக்கும், காமசராசருக்கும் செய்துள்ளனர்! விமான நிலையத்தில் அண்ணா, காமராசர் பெயர்களும் அகற்றப்பட்டு, அப்படியே நீடிக்கும் கொடுமையில் மாற்றமில்லை.

விரைவில் இந்த அநியாய அக்கிரமங்களைக் கண்டித்து, மாபெரும் மக்கள் போராட்டத்தைத் தொடங்க மக்களை தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசு ஏனோ தூண்டுகிறது!

வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்! அரசே இப்படி போராட்டங்களைத் தூண்டலாமா? அண்ணா பெயரில் கட்சி - ஆனால், அண்ணா பெயருக்கும் ஆபத்து என்றால், இதன் ‘‘மூலப் புருஷர்கள்’’ யார்? எந்தப் பின்னணியில் இந்த விஷமங்கள் விதைக்கப்பட்டன? தமிழ்நாட்டு மக்களே, அறைகூவல்கள் எப்படி உருக்கொள்கின்றன பார்த்தீர்களா? என்றுள்ளார்.