கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்தாலும் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அம்மாநில அரசுகள் நலத்திட்டங்களை அறிவித்திருந்தன. இதைப் போல தமிழக அரசும் செய்ய வேண்டும் எனக் குரல்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டு அவர்கள் 18 வயது அடையும்போது அந்தத் தொகை வட்டியுடன் வழங்கப்படும்.
பட்டப்படிப்பு வரை கல்வி மற்றும் விடுதிக்கான செலவையும் அரசே ஏற்கும். கொரோனாவால் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
உறவினர்களுடன் வசித்து வரும் குழந்தைகளுக்கு அவர்கள் 18 வயது அடையும் வரை மாதம்தோறும் ரூ.3,000 வழங்கப்படும் என்றும் அரசு விடுதி, இல்லங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்களில் இந்த குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.