தமிழக அரசின் ரூ.2,000 உதவித்தொகை.., யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
தமிழக சட்டசபையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
அவர் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரையை வாசித்தார்.
மாணவர்களுக்கான திட்டங்கள், பெண்களுக்கான திட்டங்கள், அரசு ஊழியர்களுக்கான திட்டங்கள் என பல திட்டங்கள் மக்களை கவரும் விதமாக இருந்தது.
இந்நிலையில், தாயுமானவர் திட்டம் மூலம் தாய் மற்றும் தந்தையை இழந்து வாடும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் இந்த பட்ஜெட்டில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும், சுமார் 50,000 குழந்தைகள் தாய் மற்றும் தந்தை என இருவரையும் இழந்து உறவினர் வீட்டில் வளர்ந்து வருகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மாதம் ரூ. 2000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த நிதியுதவியை 18 வயதை அடையும் வரை குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த குழந்தைகளுக்கு பள்ளி படிப்பு முடிந்தவுடன், கல்லூரி மற்றும் இதர தொழிற்படிப்புகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்றும் இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஆதரவற்றோர், முதியோர், மனநலம் குன்றியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.