வறட்சியை சமாளிக்க தமிழக அரசு ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு - வெளியான அரசாணை
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், பல்வேறு பகுதிகளில் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டு விவசாய பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மழையை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள், வறட்சியின் தாக்கத்தை சமாளிக்க தமிழக அரசு உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு
இந்நிலையில், வறட்சி நிலையை சமாளிக்கும் வகையில் ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நிதியின் மூலம் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் வசதியை உறுதி செய்யவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக, தேவையான இடங்களில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கிணறுகளை தூர்வாரி நீர்மட்டத்தை அதிகரித்தல், நீர் சேமிப்பு மற்றும் விநியோக வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் வறட்சியின் தாக்கத்தை குறைத்து, விவசாயிகளுக்கு தேவையான நீர் வசதியை ஏற்படுத்துவதுடன், சாகுபடி பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கும் உதவியாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.