தேர்தல் முடிவே வெளியாகாத நிலையில்..வெற்றிபெற்றதாக அதிமுகவினர்,திமுகவினர் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தேர்தல் முடிவே வெளியாகாத நிலையில் வெற்றிபெற்றதாக அதிமுகவினர்,திமுகவினர் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. முன்னணி நிலவரமே 10 மணிக்கு மேல்தான் தெரிவரும். வாக்கு எண்ணிக்கையே நடக்காத நிலையில், பல்லடம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், வெற்றி பெற்றுவிட்டதாக திருப்பூர் வடக்கு தொகுதியில் போஸ்டர் அடித்து அதிமுகவினர் சிலர் ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டரை பார்ப்போர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் பார்த்து செல்கின்றனர். எம்.எஸ்.எம். ஆனந்தனின் வீடு திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ளதால், இந்த போஸ்டரை அந்தத் தொகுதியில் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் 'வெற்றி வெற்றி வெற்றி' என்றும், 'எல்லாப் புகழும் வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் திமுக சார்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிமுக சார்பில் சார்பில் பி.குமார் ஆகியோர் களம் கண்டுள்ளனர். இருவருக்கும் இடையே இத்தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வாக்களித்து வெற்றி பெற வைத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதே போல திமுகவினரும் வெற்றிபெற்றதாக போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தேர்தல் விதிமுறை மீறலாக தற்போது இது பார்க்கப்பட்டு வருகிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் இருகட்சியினரும் மாறி மாறி போஸ்டர் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.