தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சி தலைவர் யார்?
தமிழகத்தில் தற்போது அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி போய்அடுத்து எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி நிலவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு என்னும் பணிகள் நாளை தொடங்கவுள்ளன. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கு சாதகமாகவே இருந்தன. அதிலும் திமுக 150 க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் எனவும்,அதிமுக 40 முதல் 50 இடங்களில் வெற்றிபெறும் எனவும் தகவல் வெளியானது.
இதனால் தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுகவின் ஸ்டாலின் வருவதற்கு அதிக வாய்ப்புள்ள நிலையில். அதற்கு அடுத்தபடியாக உள்ள அதிமுக எதிர்க்கட்சி ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் பெரிதாக வெடித்தது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்ததால் வேறு வழியில்லாமல் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ்தான் என ஓபிஎஸ்ஸே அறிவித்தார். ஆனால் தற்போது நிலைமை மாறியிருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தற்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளில் அதிமுக பெரிதும் எதிர்பார்த்த கொங்கு மண்டலத்தில் திமுகவே பெரியளவில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கவலைக்குரியதாக முன்பு கூறப்பட்ட தென் மண்டலத்தில் அதிமுக கணிசமான தொகுதிகளை கைப்பற்றும் என சி வோட்டர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. கொங்கு மண்டலத்தில் அதிக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் கிடைத்ததாலேயே எடப்பாடி பழனிசாமியால் முதல்வர் பதவியை பிடிக்க முடிந்தது.
அதனால்தான் முதல்வர் வேட்பாளராகவும் தனது பெயரை முன்னிறுத்த முடிந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் அதிமுக கொங்கு மண்டலத்தில் தனது பிடியை நழுவவிடும் நிலையில் அது ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமையும். எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் தரப்பு முயலும் என்கிறார்கள்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது முதல்வர் வேட்பாளர் மட்டுமே என்பதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்ற விவகாரம் அதிமுகவுக்குள் மீண்டும் எழும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.