மின் கட்டணம் உயர்வு சர்ச்சை: நடிகை வைஷாலி குற்றச்சாட்டுக்கு TANGEDCO விளக்கம்
கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து வருகிறது.
வழக்கமாக செலுத்தி வந்த தொகையைவிட, தற்போது பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வருவதாக பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, சில வீடுகளில் வழக்கத்தைவிட நான்கு மடங்கு வரை மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் புகார்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.
நடிகை வைஷாலி வைரல் வீடியோ
அந்த வீடியோவில், மின் கட்டணம் தொடர்பாக தான் முன்பு வெளியிட்ட கருத்துக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், தற்போதைய மின் கட்டண உயர்வு குறித்து தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
நடிகை வைஷாலி தனது வீடியோவில், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானபோது தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், இதுகுறித்து முன்பு வீடியோ வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக சாதாரண மக்களுக்கு வழக்கத்தைவிட அதிகமான மின் கட்டணங்கள் வருவதாகவும், இதனால் குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்குப் பதிலாக, முந்தைய முறையைப் போலவே நியாயமான கட்டணத்தை வசூலித்தால்கூட பொதுமக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்தார். தற்போதைய நிலை தொடர்ந்தால், அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படலாம் என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நடிகையின் இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், மின் கட்டணம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) விளக்கம் கொடுத்துள்ளது.
மின்சார வாரியம் விளக்கம்
மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை மின்சார வாரியத்தின் விளக்கத்தின்படி, நடப்பாண்டில் வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்தவிதமான கட்டண உயர்வும் செய்யப்படவில்லை. அதாவது, மின் கட்டண விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டதால்தான் தற்போது பொதுமக்களுக்கு அதிக கட்டணம் வந்துள்ளது என்ற குற்றச்சாட்டை வாரியம் மறுத்துள்ளது.
கோடை காலத்தில் அதிகரித்த மின் பயன்பாடு மின் கட்டணம் அதிகமாக வருவதற்கான முக்கிய காரணமாக, கோடை காலத்தில் ஏற்பட்ட அதிகப்படியான மின் பயன்பாட்டை மின்சார வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது. கோடை வெயில் நீண்ட நாட்கள் நீடித்ததன் காரணமாக, வீடுகளில் மின்விசிறி, ஏர் கண்டிஷனர், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கலாம்.

இதன் காரணமாக மொத்த மின் நுகர்வு அதிகரித்து, அதற்கேற்ப சில நுகர்வோரின் கட்டணத் தொகையும் உயர்ந்திருக்கலாம் என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. எனவே, மின் கட்டண விகிதம் உயர்த்தப்படவில்லை; மாறாக, பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவு அதிகரித்ததே சில நுகர்வோருக்கு அதிக கட்டணம் வருவதற்கான காரணம் என வாரியம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மின் கட்டணம் தொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மின் இணைப்புகளில் சிறப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 3.43 லட்சம் மின் இணைப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வில், வெறும் 0.75 சதவீத இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டதாக வாரியம் கூறியுள்ளது.
இதன் மூலம், மாநிலம் முழுவதும் மின் கட்டணக் கணக்கீட்டில் மிகப்பெரிய அளவில் தவறு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |