கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம் - சிபிசிஐடி விசாரணை கோரும் சிபிஎம்
விவசாய கல்லூரி மாணவி மரணத்தில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
கல்லூரி மாணவி
விவசாய கல்லூரி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்துகிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளார் அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, வீரமாணிக்கபுரம் 1வது தெருவில் வசிக்கும் செல்வகுமாரின் மகள் பிரித்திதேவி, சிவகங்கை மாவட்டம் விசாலன்கோட்டை சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் பிஎஸ்சி அக்ரி மூன்றாமண்டு படித்து வந்தார்.
உயிரிழப்பு
07.01.2025 அன்று காலை 9.15 மணியளவில் கல்லூரி விடுதி வார்டன் கோகிலா என்பவர், பிரித்திதேவியின் தந்தை செல்வகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரித்தி தேவி கல்லூரி விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து சுயநினைவு இல்லாமல் கிடந்ததாகவும்,
ஆயா சந்திரா என்பவரும், மாணவி தாட்சாயினி என்பவரும் பார்த்து தகவல் தெரிவித்தனர் என்றும், பின்பு அவரை காரைக்குடி குளோபல் மருத்துவனையில் சேர்த்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும், மீனாட்சி மருத்துவமனைக்கு வந்து விடுமாறு தகவல் தெரிவித்துள்ளார்.
பிரித்திதேவியின் தந்தை செல்வகுமார் பதறி அடித்து, மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பிரித்திதேவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மறுநாள் 08.01.2025 அன்று பிற்பகல் 2.45 மணிக்கு பிரித்திதேவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் செல்வகுமாரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். போலீசார் சொன்ன அடிப்படையில் செல்வகுமார் புகார் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார்.
சந்தேகங்கள்
இதன்பேரில் சிவகங்கை மாவட்டம் கல்லல் காவல்நிலையத்தில் வழக்கு எண் 04/2025 வழக்கு, 194 பிஎன்எஸ் பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெற்றோரும், ஊர்மக்களும் கீழ்க்கண்ட சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
1 மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்தது குறித்து கல்லூரி நிர்வாகம் ஏன் புகார் கொடுக்கவில்லை ?
2. மொட்டை மாடிக்கு செல்லும் கதவு எப்போதும் பூட்டப்பட்டிருக்கும். பிரித்திதேவிக்கு மாடிக்கு செல்லும் கதவை எப்படி திறந்தார். அவருக்கு சாவி எப்படி கிடைத்தது.
3 . விடுதியில் ஏன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
4. கீழே விழுந்த மாணவியை கல்லூரி வாகனத்தில் காரைக்குடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ஏன்? ஆம்புலன்சுக்கு ஏன் தகவல் சொல்லவில்லை.
5. மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏன் யாரும் வரவில்லை, பெற்றோரை ஏன் சந்திக்கவில்லை.
6. விசாரணை முடியும் முன்னரே, பிரித்திதேவியின் அம்மா திட்டுவார் அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கூறியது ஏன் ?
7. பிரித்தியின் தந்தை செல்வக்குமாரிடம் ஏன் போலீசார் கட்டாயப்படுத்தி புகாரை எழுதி வாங்கினர்.
சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரி மாணவியின் சந்தேக மரணம், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடுக! pic.twitter.com/ewKJuFK7ca
— Shanmugam P (@Shanmugamcpim) January 16, 2025
மேற்கண்ட சூழலில் மாணவி பிரித்தி தேவியின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என்று கருத அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. மேலும், காவல்துறையின் அணுகுமுறையும் பாரபட்சமானதாக உள்ளது. எனவே, இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும், மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது." என தெரிவித்துள்ளார்.