தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரிகள் திறப்பு
தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா கொரோனா 2வது அலை பரவலைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வந்தது.
இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், தளர்வு நீட்டிப்பு குறித்தும் கொரோனா பாதிப்பு குறித்தும் மருத்துவத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனிடையே தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் செப்டம்பர் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் திட்டமிட்டபடி செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து தொடரும் என்றும், விநாயகர் சதுர்த்தி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, கொண்டாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.