உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கண்ட தம்பதிகள்..!
தம்பதியினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களை கட்சி பேதம் இன்றி இணையதளம் மற்றும் செய்தி ஊடகங்களின் மூலம் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஒரு கட்சி சார்ந்து இருந்தாலும், சுயேட்சையாக இருந்தாலும் கணவன் மனைவி இருவருமே அரசியல் களத்தில் உள்ளாட்சியில் போட்டியிடுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
திமுக, அதிமுக , அமமுக, கட்சிகளோடு சுயேட்சையாகவும் தம்பதியினர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.
திமுக சார்பாக மதுரை மாவட்ட அலங்காநல்லூர் பேரூராட்சி 4வது வார்டில் ரேணுகா ஈஸ்வரி என்பவரும் அதே பேரூராட்சியில் 5வது வார்டில் அவரது கணவர் கோவிந்தராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
திருவாரூர் நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் மற்றும் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவராக உள்ள கலியபெருமாள் 1வது வார்டிலும்
அவரது மனைவி மலர்விழி 2வது வார்டிலும் போட்டியிட்டு இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். கலியபெருமாள் கடந்த 24 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறார்.
ஏற்கனவே ஒரு முறை நகர் மன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். முதுகுளத்தூர் பேரூராட்சியில் அமமுக சார்பாக 6வது வார்டில் போட்டியிட்ட கருப்பணன் மற்றும் 5வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி மீனாள் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கட்சி சின்னம் இன்றி கட்சி ஒத்துழைப்பின்றி மக்கள் செல்வாகுடன் சாயல்குடி பேரூராட்சியில் சுயேச்சையாக வார்டு 1இல் போட்டியிட்ட மாரியப்பன் மற்றும் வார்டு 2இல் போட்டியிட்ட அவரது மனைவி பானுமதி ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.