தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு - சென்னையில் மட்டும் 5 ஆயிரம் பேர்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, வழிபாட்டு தலங்கள் வார இறுதி நாட்களில் மூடல் உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு எண்ணிக்கையான 8,981 இல் இருந்து இன்று10,978 ஆக உயர்ந்துள்ளது. இதில் 74 நபர்களுக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 40,260 ஆக உயர்ந்துள்ளது.மேலும் கொரோனா தொற்றிலிருந்து 1,525 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
அதிகப்பட்சமாக சென்னையில் மட்டும் 5,098 பேருக்கும், செங்கல்பட்டில் 1,039 பேருக்கும், திருவள்ளூரில் 514 பேருக்கும், கோவையில் 408 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 257 பேருக்கும், திருச்சியில் 184 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.