தமிழகத்தை அதிர்ச்சியூட்டும் கொரோனா எண்ணிக்கை - ஒரே நாளில் 2 ஆயிரம் உயர்வு
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,983 இல் இருந்து 8,981 ஆக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, வழிபாட்டு தலங்கள் வார இறுதி நாட்களில் மூடல் உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,76,413 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 27,08,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 984 பேர் குணமடைந்த நிலையில் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்தனர்.
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,825 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 4,531 பேருக்கும், செங்கல்பட்டில் 1,039 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 257 பேருக்கும், திருவள்ளூரில் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 30,817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.