பிரதமர் மோடியுடன் சந்திப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி சென்று அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார்.
மு.க.ஸ்டாலின்
கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை அழைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வதாக இருந்தது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் டெல்லிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
டெல்லி பயணம்
மறுநாள் (புதன்கிழமை) காலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரையும் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளை தெரிவிக்கவுள்ளார்.
அதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசுகிறார். அப்போது 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்ததற்கும், இந்த போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்கும் பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவிக்கிறார்.
பிரதமருடன் சந்திப்பு
மேலும், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி அளித்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு விரிவான மனு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார். ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
இவை தவிர, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்றும் தெரிகிறது.
இதனால், பிரதமர் மோடியுடனான முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அன்று இரவே சென்னை திரும்புகிறார்.