கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கொரோனா ஊரடங்கை 15-ந் தேதியில் இருந்து நீட்டிக்கும்போது என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வரும் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
முன்னதாக, தமிழ்நாட்டில் கடந்த டிசம்பரில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய ஒமைக்ரான் தொற்று பரவல் இந்தியாவில் தொடங்கி தமிழகத்திலும் அதிகரிக்க ஆரம்பித்தது.
இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கும், ஞாயிறுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த சமயத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்பட்டது.
தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் தேர்தல் பிரசாரத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இப்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய இடங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
தற்போது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லுக்கு காலை 8 ம்ணி முதல் இரவு 8 மணிவரை மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்,
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம் என்றும் வாகன பேரணி, ஊர்வலங்களுக்கும் அனுமதி அளித்து பிரசாரத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
ஆனாலும் வருகிற 15-ம் தேதி வரை 16 வகையான தடை இன்னும் நீடித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கை 15-ந் தேதியில் இருந்து நீட்டிக்கும் போது என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம் என்பதை முடிவு செய்ய,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு என்னென்ன தளர்வுகளை கூடுதலாக அறிவிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.
இதுபற்றி அரசு உயர் அதிகாரி கூறுகையில்,
“கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இனியும் அதிக கட்டுப்பாடுகள் இருந்தால் சரிபடாது. மக்களின் பொருளாதார வாழ்வாதார பிரச்சினைக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும்.
அது என்னென்ன தளர்வுகள் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்” என தெரிவித்தார்.