கோவையில் நீடிக்கும் பதற்றம் - தலைமைச் செயலாளர் ஆலோசனை
கோவையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார்.
பெட்ரோல் குண்டுவீச்சு
கோவை காந்திபுரம் வி.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும், கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள தனியார் துணிக்கடை மீதும் மர்ம நபர்கள் பாட்டில் குண்டு வீசினர்.
தொடர்ந்து, குனியமுத்தூர் முத்துச்சாமி சேர்வை வீதியில் உள்ள இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தியாகு என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்து சென்றுள்ளனர்.
தலைமைச் செயலாளர் ஆலோசனை
அடுத்தடுத்து நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் கோவை மாநகரில் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக, தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மற்ற துறை சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நடவடிக்கைகள்
அதேபோல், தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, உள்துறைச் செயலாளர் பணீந்திரரெட்டி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பதற்றத்தைத் தணிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்,
பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தும் தலைமைச் செயலாளர், பின்னர் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.