தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் - ஸ்டாலின் அரசு மீது குவியும் எதிர்பார்ப்புகள்
2021-22 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்கிறார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள திமுக தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் மிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக திமுக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கல்விக்கடன் தள்ளுபடி, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல், 100 நாள் வேலைத் திட்ட நாட்களை 150 நாட்களாக உயர்த்துதல், நகர்ப்புறங்களிலும் 100 நாட்கள் வேலைத் திட்டம், முதியோர் உதவித் தொகை, பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு, உழவர் சந்தைகள், கீழடி அகழாய்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக இன்று இ பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 11ஆம் தேதி ஆலோசனை நடத்தி, பட்ஜெட்டை இறுதி செய்தார். கொரோனா காரணமாக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.