மேகேதாட்டு விவகாரத்தில் சவால் விடுத்த டிகே சிவகுமார்..முதல்வர் இன்று பேசுவாரா?அண்ணாமலை!
தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு நீங்கள் நடத்தும் நாடகம் தொடரட்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்து, மாநில உரிமைகளை தமிழக முதல்வர் பேண வலியுறுத்தியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,’’ தமிழகத்துக்கு அண்டை மாநிலங்களுடன் தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக கேரள மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, செண்பகவல்லி அணை பிரச்சினை, மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் பிரச்சினை உள்ளன.
நாடகம்
மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம்” என்று அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் சவால் விடுத்துள்ளார்.இதுவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 முறை கேரளா சென்றுள்ளார் அவர் ஒருமுறையாவது மாநில உரிமைகளப் பற்றி பேசியிருக்கிறாரா?
பகிரங்கமாக மேகேதாட்டு விவகாரத்தில் சவால் விடுத்த டிகே சிவகுமார் இன்று சென்னை வந்துள்ளார். அவரிடம் அவ்விவகாரம் பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று பேசுவாரா?
இப்படியாக தமிழகத்தின் உரிமைகளைப் பற்றி பேசாமல், தமிழக உரிமைகளைப் பறிக்கும் மாநிலங்களின் முதல்வர்களையே இங்கு வரவழைத்து தேவையற்ற ஒரு கூட்டத்தை ஸ்டாலின் நடத்துகிறார்.