”தமிழகத்திலிருந்து நிறைய பாஜக எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டு கேபினட் அமைச்சர்களாக அமருவார்கள்" - அண்ணாமலை பேட்டி

tamil nadu annamalai bjp chief talks about 2024 pm elections
By Swetha Subash Dec 26, 2021 11:55 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

சமீபத்தில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், "2024 மக்களவை தேர்தலில் தப்பித் தவறி பாஜக வென்று மீண்டும் ஆட்சியை அமைத்தால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.

தமிழ்நாட்டிற்கும் அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். தமிழக முதல்வர் அண்ணன் மு.க. ஸ்டாலினுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று தான்.

அகில இந்தியா அளவில் பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து அரசியல் சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஆற்றலும் தகுதியும் முதல்வர் ஸ்டாலினுக்கு தான் இருக்கிறது.

காங்கிரஸ், பாஜக இல்லாத ஒரு அணியை உருவாக்க வேண்டும் என ஒரு சிலர் முயல்கின்றனர். ஆனால், திமுக அப்படிப்பட்ட முயற்சிக்குத் துணைநின்று விடக் கூடாது என உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.

இதுதொடர்பாக அடையாற்றில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,

"தமிழகத்தை பொருத்தவரை சில கட்சிகளுக்கு வேலையே இல்லை. இன்னொரு கட்சியின் சின்னத்தில் நின்று ஜெயித்தால்தான் அந்த கட்சிகளுக்கு வாழ்க்கையே.

திமுக என்ற ஒரு கட்டுமரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு கடலுக்குள் இழுத்து சென்று அதை வைத்து தத்தளித்து தப்பி வந்துவிடலாம் என சில கட்சிகள் நினைக்கின்றன.

2024ஆம் ஆண்டு மீண்டும் மோடியின் அலை வரப்போகிறது. 400 எம்பிக்களை வைத்துக் கொண்டு பிரதமராக தான் போகிறார். உத்தரப் பிரதேச தேர்தலுக்கு பிறகு 3ஆவது அணி குறித்த பேச்செல்லாம் இருக்காது.

பாஜகவுக்கு எதிராக என்னதான் இவர்கள் பிரச்சாரம் செய்தாலும் கூட தமிழகத்திலிருந்து நிறைய பாஜக எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டு கேபினட் அமைச்சர்களாக அமருவார்கள்.

எத்தனை அணி வேண்டுமானாலும் உருவாகட்டும். ஆனால் பாஜக அணிதான் வெல்லும். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானது. மக்கள் இரு விஷயங்களை பார்த்துதான் வாக்களிக்க போகிறார்கள்.

தமிழகத்தில் இருந்து பாஜக சார்பில் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அவ்வாறு தேர்வு செய்தால் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும். இதன் மூலம் தமிழகம் அடுத்த நிலைக்கு செல்ல போகிறது. இதைத் தான் பிரச்சாரத்தில் பயன்படுத்த போகிறோம்” என்றார்.