முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பாஜக - ஏன் தெரியுமா?
தமிழக பாஜக முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஸ்டாலின் பிறந்தநாள்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, அண்மையில் தூத்துக்குடி மாவட்ட குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதற்காக நாளிதழில் மீன்வளத்துறை அமைச்சர் ஆர்.அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் கொடுத்திருந்த விளம்பரத்தில் சீன கொடியுடன் ராக்கெட் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சீன மொழியில் வாழ்த்து
பாஜக தரப்பிலும் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. விளம்பரம் சர்ச்சையான நிலையில் பத்திரிகை விளம்பரத்தில் சீன கொடியுடன் ராக்கெட் இடம்பெற்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை என அமைச்சர் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், சீன ராக்கெட் விவகாரத்தை மனதில் கொண்டு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தனது அதிகாரபூர்வ சமூக ஊடக பக்கத்தில் சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.