"ஆளுநரின் கருத்து, உயர்மட்டக் குழுவை அவமானப்படுத்துவது போல் உள்ளது" : பேரவையில் கொந்தளித்த அமைச்சர்

neet tnassembly masubramniyam
By Irumporai Feb 08, 2022 05:42 AM GMT
Report

 நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை எதிர்க்கிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று கூடியது. நீட் விலக்கு மசோதா கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக ,தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 142 நாட்கள் கழித்து தமிழக சட்டமன்றம் நீட் விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில், நீட் தேர்வு விலக்கு மசோதாவை நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் தாக்கல் செய்தார்.

"ஆளுநரின் கருத்து, உயர்மட்டக் குழுவை அவமானப்படுத்துவது போல் உள்ளது" : பேரவையில் கொந்தளித்த அமைச்சர் | Tn Assembly Pass Anti Neet Bill Today

அப்போது பேசிய அவர், "அறிக்கையின் அடிப்படையில் மசோதா கொண்டு வரப்பட்டது என்று ஆளுநர் கூறியிருப்பது மிகவும் தவறான தகவல். மேலும் ஆளுநரின் கருத்து உயர்மட்டக் குழுவை அவமானப்படுத்துவது போல் உள்ளதாக கூறினார்.

மேலும் ,நீட் தேர்வை தமிழகம் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில் நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்பட்டது.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்து மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். தன்னிச்சையாக ஆளுநர் சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியது என்பது சரியான முடிவு அல்ல.

பொது மக்களிடம் கருத்து கேட்டபிறகே நீட் விலக்கு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அரசியலமைப்பின்படி ஆளுநர் செயல்படாமல் தன்னிச்சையான கருத்துகளை கூறியது சரியல்ல.

கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை உயரிய கண்ணோட்டத்தொடு பார்க்காமல், குறை கூறுவது சரியல்ல. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்புகிறேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல.

நீட் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களை எதிர்மறையாக பாதித்துள்ளது. மட்டுமல்லாது இது பள்ளிக்கூட பயிற்று முறையை ஊக்குவிக்காமல் தனிப்பயிற்சியை ஊக்குவிக்கிறது." என்றார்.