திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ. கே.பி. சங்கரின் கட்சி பதவி பறிப்பு!
சென்னையில் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே.பி.சங்கர். இவர், சமீபத்தில் சென்னை திருவொற்றியூரில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டட விபத்தின்போது, அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பாதிக்கப்பட்டவருக்கு வீடு கட்டித் தருவதாகவும், அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை தானே வாங்கி தருவதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து எம்எல்ஏ கே.பி. சங்கர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் கழக கட்டுப்பாட்டை மீறி வருவதால் திருவொற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
திருவொற்றியூர் தொகுதியிலிருந்து முதல்முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வாகிய இவர், மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.