டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை முயற்சி - திமுக தொண்டர்கள் அதிர்ச்சி
திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை பகுதியை சேர்ந்த திமுக பொருளாளர் டி.ஆர். பாலு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவரது மகன் டி.ஆர்.பி ராஜா 2021 சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர்களது வீடு தளிகோட்டை கிராமத்தில் உள்ள நிலையில், அங்கு தற்போது டி.ஆர்.பாலு வீட்டில் இல்லாததால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதேபோல அவரது வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு வீடும் பூட்டப்பட்டு இருந்துள்ளது.
இதனை நீண்ட நேரமாக நோட்டமிட்டுள்ள கொள்ளையர்கள் டி.ஆர்.பாலுவின் வீட்டின் அருகே உள்ள வீட்டின் கதவின் பூட்டை உடைத்து முதலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர் டி.ஆர்.பாலுவின் வீட்டிற்குள் பூட்டை உடைத்து நுழைந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் டி.ஆர். பாலு வீட்டில் பொருட்களோ, பணமோ, நகை என எதுவும் இல்லை என தெரியவந்துள்ளதாகவும், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் அதைக் கொண்டும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.