மாடு மேய்த்தவரை ஊராட்சி மன்ற தலைவர் ஆக்குவதா? பூட்டியே கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம்!
எங்கள் வீட்டில் மாடு மேய்த்தவரை ஊராட்சி மன்ற தலைவராக ஏற்று கொள்ளமுடியாது என ஊராட்சி மன்ற செயலாளரின் அடாவடிதனத்தால் ஊராட்சி மன்ற அலுவலகமே பூட்டி கிடக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. எங்கு இந்த கொடுமை..?
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள கல்லரப்பாடி ஊராட்சி மன்ற தலைவராக இப்பகுதிக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஊராட்சி மன்ற தலைவராக அப்பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் தான் ஏழுமலை.
ஊராட்சி மன்ற செயலாளர் வேல்முருகன் என்பவர், ஏழுமலையை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களுக்கு பணி செய்ய விடாமல் இடையூறு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
மேலும் தங்கள் வீட்டில் மாடு மேய்த்தவரை ஊராட்சி மன்ற தலைவராக ஏற்க முடியாது என ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி மன்ற தலைவரின் இருக்கையில் அமர விடாமல் தனியாக பிளாஸ்டிக் சேர் போட்டு அமர வைத்து அவமானப்படுத்துவதாகும் கூறப்படுகிறது.
மேலும், ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்திற்கு வருவதால் ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்படாமல் எப்போதும் பூட்டியே வைத்துள்ளதாகவும், ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு தேவைப்பட்ட கையொப்பத்தை பெற மட்டும் அலுவலகத்திற்கு வரவழைப்பதும், மக்களுக்கான எவ்வித பணியும் செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து இது குறித்து வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் அளிக்கப்பட்டும், ஒரு தலைபட்சமாகவே விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதனால் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு எந்த பணிகளும் செய்ய முடியவில்லை என ஏழுமலை வேதனையுற்றுள்ளார்.
இதையடுத்து ஊராட்சி பணிகளை செய்ய இடையூறு செய்து வரும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கு கோரி ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை பூட்டிய ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.