திருவண்ணாமலை தீபத்திருவிழா: 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

Chennai highcourt திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா
By Petchi Avudaiappan Nov 18, 2021 01:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் அக்னித்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மகாதீபத் திருவிழா கடந்த நவம்பர் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

திருவண்ணாமலை தீபத்திருவிழா: 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி | Tiruvannamalai Maha Deepathiruvila Permission

ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நேற்று (நவம்பர் 17) மதியம் முதல் இருபதாம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து இந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் டி.செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டு, பின்னர் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற மகா கார்த்திகை தீப விழாவிற்கு, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்து அறிவித்துள்ளது. இது தவறான முடிவாகும்.

மருத்துவம், காவல், தீயணைப்பு, மின்சாரம், குடிநீர் போன்ற உரிய ஏற்பாடுகளுடனும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடனும் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த 6 ஆம் தேதி அளித்த மனுவை முறையாக பரிசீலித்து முடிவெடுக்க அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

திருவண்ணாமலை தீபத்திருவிழா: 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி | Tiruvannamalai Maha Deepathiruvila Permission

அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் ஆஜராகி நேற்று வரை 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், தீபத் திருவிழாவிற்கு 20 லட்சத்திற்கு மேலானவர்கள் வருவார்கள், 3 லட்சம் பேர் கிரிவலம் செல்வார்கள், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் 3 நாட்களுக்கு உள்ளூரை சேர்ந்த 3 ஆயிரம், வெளியூரை சேர்ந்த 7 ஆயிரம் பேரை அனுமதிக்க முடியும். கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைதான் இந்த ஆண்டும் பின்பற்றப்படுவதாகவும் அவர் கூறினார். இறுதியில்  கிரிவலப்பாதையில் மொத்தமாக 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம். அதில் உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேருக்கும் அனுமதி வழங்கப்படலாம்.

பரணி தீபத்தின் போது, கட்டளைதாரர்கள் 300 பேருக்கு அனுமதி வழங்கலாம் என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தீபத்திருவிழாவில் கோவிட் விதிகளை பின்பற்றி 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேரும் ; மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 15 ஆயிரம் பேரும் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.

பங்கேற்பவர்கள் கிரிவலம் செல்லலாம்; கிரிவல பாதையில் இருந்து தரிசனம் செய்யலாம். தீபத்திருவிழாவில் பங்கேற்பதற்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பது அவசியம். நாளை மற்றும் நாளை மறுநாள் மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.