ஆன்மீகத்தில் மூழ்கியிருக்கும் திருவண்ணாமலை - சிறப்பும்,பெருமையும் தெரிஞ்சுப்போம்!
சங்க காலத்தில் தொண்டைநாடு என்று அழைக்கப்பட்ட வட தமிழகத்தின் ஒரு பகுதியே தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம்.
திருவண்ணாமலை
தமிழ்நாட்டின் நான்காவது பெரிய மாவட்டமாகும். இடைக்காலத்தில் நடுநாடு என்றழைக்கப்பட்ட பகுதியில் திருவண்ணாமலை, செங்கம் போன்ற பகுதிகள் இருந்தன. காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த பல்லவர்கள் ஆட்சிப்பகுதியின் முக்கிய இடங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளன.
பல்லவர்களே தமிழ்நாட்டில் முதலில் கோயில்கள் அமைத்த பெருமைக்கு உரியவர்கள். பல்லவர்களுக்குப்பிறகு அமைந்த சோழர் ஆட்சியில் தற்போதைய திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு பரப்பும் அடங்கியிருந்தது. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் அதிக அளவில் ஏரிகள், குளங்கள் வெட்டப்பட்டன.
வரலாறு
இவைகளைப் பாதுகாக்கவும் மராமத்து பணிகளை கவனிக்கவும் உரிய ஆணைகள் பிறப்பித்த செய்திகள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆவூர், திருவண்ணாமலை, தாமரைப்பாக்கம், திருமலை, பழங்கோயில், செங்கம், திருவோத்தூர், பிரம்மதேசம் கூழமந்தல், மடம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள கோயில் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சிறப்புவாய்ந்த கோயில்கள் ஆகும்.
இடைக்கால வரலாற்றில் பிரிக்க முடியாத பெயர் வல்லாள மகாராசன் என்கிற வீரவல்லாளன். இவர் காலத்தில் திருவண்ணாமலை துணைத்தலைநகராக இருந்தது. திருவண்ணாமலையார் எனப்படும் அண்ணாமலைக்கோயிலின் மூலவருக்குத் தந்தையாகப் போற்றப்பட்டவர். 1989ல் வடஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என புதிய மாவட்டம் உருவாகியது.
பொருளாதாரம்
இம்மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தாவசி என 6 வட்டங்கள் இருந்தன. 1997ல் திருவண்ணாமலை மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. விடுதலைக்குப்பிறகு கல்வி, மருத்துவம் மற்றும் இதர அரசு சேவைகள் வளர்ந்துவந்தன. இம்மாவட்டத்தில் வேளாண்மை, பட்டு நெசவு முக்கிய வாழ்வாதாரமாகும்.
இவைதவிர சிறு தொழிற்சாலைகளும், சர்க்கரை ஆலைகளும், செய்யார் சிப்காட் தொழிற்போட்டையில் தோல் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அமைந்து பெருமை சேர்க்கின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களும், பண்டைய கால கோட்டைகள், அருணகிரிநாதர், அப்பைய தீட்சிதர், சைவ எல்லப்ப நாவலர் உள்ளிட்ட ஆன்றோர்களும் சமண சமய ஆன்றோர்களும் அவதரித்த புண்ணிய பூமியாகும்.
ஆன்மீக சிறப்பு
தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட சாத்தனூர் அணை, செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்ட குப்பநத்தம் அணை, மிருகண்டாநதி நீர்த்தேக்கம், செண்பகத்தோப்பு அணை ஆகியவை இம்மாவட்டத்தில் வளம் சேர்த்து வருகின்றன. இம்மாவட்டம் பெயர் பெற்றதே அண்ணாமலையார் கோயில் மூலம் தான். அந்த அளவுக்கு பிரசித்தி பெற்றது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இங்கு ஆண்டுக்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
இவற்றுள் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற பிரம்மோற்சவம் சிறப்பானதாகும். 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் 6 பிரகாரஙகளையும் 9 ராஜகோபுரங்களையும் கொண்டதாகும். 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம்.
இந்த திருவண்ணாமலை கோயிலில், அதிக அளவில் சோழர்கள் காலத்திய கல்வெட்டுகளும், அழகிய சிற்பங்களும் இருந்திருக்கலாம். மேலும் திருவண்ணாமலை 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நகரமாக இருந்திருக்கிறது என்பது தனிச்சிறப்பு.