திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1989 ஆம் அண்டு செப்டம்பர் 30 தேதி முதல் தனி மாவட்டமாக இயங்கிவருகிறது. வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுடன் திருவண்ணாமலை மாவட்டம் எல்லையை பகிர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, ஆரணி என இரு நாடாளுமன்ற தொகுதிகளும், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி) என 8 சட்டமன்ற தொகுதிகளும், திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளும் அமைந்துள்ளது.
க.தர்பகராஜ் ஐ.ஏ.எஸ்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பாஸ்கர பாண்டியன் ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, 31.01.2025 அன்று க.தர்பகராஜ் ஐ.ஏ.எஸ் திருவண்ணாமலை மாவட்டத்தின் 24வது மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்த தர்பகராஜ் (47) எம்.ஏ., பி.எல். படித்து விட்டு 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, துணை ஆட்சியராக அரசு பணியில் சேர்ந்தார்.
அதன் பின்னர், நீலகிரி மாவட்டம், குன்னுாரில் வருவாய் கோட்டாட்சியர், கோயம்புத்துார் துணை ஆட்சியர், மதுரை மாநகராட்சி துணை ஆணையர், சென்னை பெருநகர மாநகராட்சி உதவி ஆணையர், திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய பொது மேலாளர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன சட்ட அலுவலர், ஆவடி மாநகராட்சி ஆணையர், உயர் கல்வித்துறை துணைச் செயலாளர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
தர்பக ராஜ் ஐ.ஏ.எஸ் திருப்புதூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்த போது, அரசு அலுவலகங்களில் அதிரடி ஆய்வு நடத்துவது, மனுகளுக்கு உடனடியாக தீர்வு வழங்குவது என பொதுமக்களின் பாராட்டை பெற்றார்.
பாஸ்கர பாண்டியன் ஐ.ஏ.எஸ்
முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த முருகேஷ் ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, 29.01.2025 அன்று பாஸ்கர பாண்டியன் ஐ.ஏ.எஸ் திருவண்ணாமலை மாவட்டத்தின் 23 வது மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர பாண்டியன் ஐ.ஏ.எஸ் 2005 ஆம் ஆண்டு திருச்சியில் துணை ஆட்சியராக அரசு பணியில் சேர்ந்தார். அதன் பிறகு சேலம் மாவட்ட ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர், தருமபுரி மாவட்ட வழங்கல் அலுவலர், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் பொது மேலாளார், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் இணை இயக்குநர், சென்னை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலக் கழகத்தின் பொது மேலாளர், நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரி ஆகிய பொறுப்பு வகித்தார்.
அதன்பிறகு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆகிய பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மது போதைக்கு அடிமையான பெற்றோரிடமிருந்து குழந்தைகளை மீட்டு அவர்களை கல்வியை தொடர செய்தது, பள்ளிக்கு செல்லாத 600 மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை பள்ளியில் சேர்த்தது போன்ற செயல்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
முருகேஷ் ஐ.ஏ.எஸ்
முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, 16.06.2021 அன்று முருகேஷ் ஐ.ஏ.எஸ் திருவண்ணாமலை மாவட்டத்தின் 22 வது மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
முருகேஷ் ஐ.ஏ.எஸ் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய போது, நீர் மட்டத்தினை உயர்த்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் "CATCH THE RAIN CAMPAIGN" முனைப்பு இயக்கத்தில் 30 நாட்களுக்குள் 541 ஊராட்சிகளில் 1121 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டது.
மேலும், நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் 753 தடுப்பணைகள், சிறு குன்றுகளை பசுமை ஆக்குதல், மழைநீர் சேகரிப்புக்காக மலை பாங்கான இடங்களில் நீண்ட பள்ளங்களை அமைத்தல், பெருவாரியான மரங்கள் நடும் திட்டத்தின் கீழ் 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சமூக காடுகள் ஏற்படுத்தப்பட்டது.
இதற்காக டெல்லியை சேர்ந்த SKOCH நிறுவனம், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் செயல்பாட்டினை பாராட்டி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஐ.ஏ.எஸ் க்கு விருது வழங்கி கௌரவித்தது.
சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ்
முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கந்தசாமி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, 15.11.2000 அன்று சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ் திருவண்ணாமலை மாவட்டத்தின் 21 வது மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ் 2009 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். ஐபிஎஸ் அதிகாரி மதன் மோகனின் மகனான இவர், இன்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஐஆர்எஸ் பதவி கிடைத்தது. மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி இந்திய அளவில் 91 வது இடம் பிடித்து ஐ.ஏ.எஸ் ஆனார்.
முதலில் ஓசூர் மாவட்ட துணை ஆட்சியராக பதவியை தொடங்கிய இவர், அதை தொடர்ந்து சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய இயக்குநர், மதுரை மாநகராட்சி ஆணையர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகிய பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியர்களுக்கான விருதை அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து பெற்றார். தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 30 லட்ச ரூபாய் செலவில் 'ட்ரீம் கிச்சன்' எனப்படும் உணவகத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே ஆரம்பித்துக் கொடுத்தார்.
மேலும் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் அங்குதான் உணவருந்த வேண்டுமென உத்தரவிட்டார். மேலும், ஆட்டிசம் பாதித்த பெண்ணை ஊக்குப்படுத்தி, மாநில அளவிலும், தேசிய அளவிலும் குண்டு எறிதல் போட்டியில், தங்க பதக்கங்கள் பெற வைத்தார்.
கந்தசாமி ஐ.ஏ.எஸ்
கந்தசாமி ஐ.ஏ.எஸ் 31.08.17 முதல் 14.11.20 முதல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். தனது பணி காலத்தில் 18 வயது பெண் ஒருவர் தனது பெற்றோரை இழந்து நிர்கதியாக நிற்பதாகவும், அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த பெண்ணின் சத்துணவு அமைபலராக பணியாற்றியதை தெரிந்து கொண்ட இவர், அதே வேலையை இவருக்கு வழங்கலாமா காலிப்பணியிடம் உள்ளதா என அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
காலிப்பணியிடம் உள்ளது ஆனால் அந்த பதவிக்கு குறைந்த பட்ச வயது 21 என அதிகாரிகள் கூறிய நிலையில் தலைமை செயலருக்கு கடிதம் எழுதி, இந்த பெண்ணுக்கு வயது விலக்கு பெற்று அந்த வேலையை பெற்றுக்கொடுத்தார். அந்த ஆணையை அந்த பெண்ணின் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கி அவர்களுடன் உணவருந்தினார். மேலும், அந்த பெண் தொலைதூர கல்வி பயில விரும்பியததையடுத்து அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். தொடர்ந்து அவரது சகோதரி இலவசமாக கல்லூரி கல்வியை படிக்கவும், சகோதரருக்கு பள்ளி செல்ல மிதிவண்டியும் வழங்கி மாவட்ட ஆட்சியர் அந்த குடும்பத்திற்கு தந்தை பொறுப்பில் இருந்து செயல்பட்டத்தை திருவண்ணாமலை மக்கள் வெகுவாக பாராட்டினார்.
பணிகளில் தாமதம் செய்யும் அதிகாரிகளிடமும் அவ்வப்போது கடுமை காட்டுவார். கை கால் செயல் இழந்தவர்களுக்கு, கழுத்து முதுகு தண்டுவடம் காயம் உள்ளிட்ட மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு தொலைபேசியில் அழைத்தால் வீட்டிற்கே வந்து சிகிச்சையளில்கும் திட்டத்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தினார்.
முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய சத்யபிரதா சாகு ஐ.ஏ.எஸ் 06.06.2004 முதல் 03.06.2008 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.