திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தேரோட்டம் தொடங்கியது

Festival
By Thahir Dec 03, 2022 03:19 AM GMT
Report

கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளான இன்று அருணாசலேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலகலமாக தொடங்கியது.

கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 6ம் நாளான நேற்று காலை 11 சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம் கோலகல தொடக்கம் 

இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளான இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tiruvannamalai Arunachaleswarar Temple Chariot

2 ஆண்டுகளுக்கு பின் உற்சாகத்துடன் பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் தேர்களை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். காலை விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதிஉலா வந்தது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படுகிறது.

இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் அணிவகுத்து வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி மாடவீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும்.

சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர்கள் இழுப்பார்கள். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும். தேரோட்டத்தையொட்டி திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று ஈடுபட்டுள்ளனர். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.