கடனை திருப்பி கேட்ட நபர் கொடூர கொலை ! சடலத்தை பைக்கில் ஊர்வலமாக எடுத்து சென்ற அவலம்!
திருப்பூரில் கடனை திருப்பி கேட்ட இளைஞரை தாயுடன் சேர்ந்து கொலை செய்து சடலத்தை எடுத்து ஊர்வலமாக சென்று எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கல்லங்காடு பாறைக்குழியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது. சடலம் கண்டெடுக்கப்பட்ட தினத்தன்று, சந்தோஷ்குமாருடன் வேலை பார்த்து வந்த முருகேஸ்வரி தனது மகனுடன் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றதாக கூறப்பட்டது.
இதனால் சந்தேகத்தின் பேரில், தேனி சென்ற தாய், மகனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கணவர் தேனியில் இருக்கும் நிலையில் முருகேஸ்வரி மகனுடன் தனியாக திருப்பூரில் தங்கி வேலைப்பார்த்து வந்துள்ளார்.
ஒரே பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் பழக்கமான சந்தோஷ்குமார், முருகேஸ்வரிக்கு தேவையான நேரங்களில் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார்.
மேலும் சந்தோஷ்குமார், முருகேஸ்வரியை தன் பாலியல் இச்சைக்கு அவ்வபோது பயன்படுத்தி கொண்டுள்ளார். மகன் இல்லாத நேரங்களில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் சந்தோஷ்குமார், முருகேஸ்வரியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். பணம் வாங்கிய காரணத்தால் முருகேஸ்வரியும் சந்தோஷ்குமாருக்கு ஒத்துழைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் கொடுத்த பணத்தை வட்டிப்போட்டு கொடுக்க வேண்டும் என சந்தோஷ்குமார் கேட்டதால், ஆத்திரத்தில் முருகேஸ்வரி, சந்தோஷ் குமார் என்னை இவ்வளவு நாள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக மகனிடம் அழுது கதறியுள்ளார்.
இதனால் சந்தோஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட மகன் ஆரோக்கியதாஸ், சந்தோஷ்குமாரை மது அருந்த அழைத்து சென்றுள்ளார். சந்தோஷ்குமாரை அளவுக்கு மீறி மதுவை அருந்தவிட்டு, முருகேஸ்வரி, ஆரோக்கியதாஸ் கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து அவரை சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
பின்னர், சடலத்தை எங்கு வீசுவது என்று தெரியாமல் பைக்கிலேயே நடுவில் அமர வைத்து ஊர்வலம் சென்று வந்துள்ளனர். கடைசியில், வேறு கிராமத்துக்கு அழைத்து சென்று அங்குள்ள பாறைக்குழியில் சடலத்தை போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றுள்ளதாக விசாரணையில் ஒப்பு கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து தாயையும், மகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.