சடலத்தை மாற்றிக்கொடுத்த திருப்பூர் அரசு மருத்துவமனை... உறவினர்கள் அதிர்ச்சி...
திருப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அரசு மருத்துவமனை மாற்றி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வேலம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று பாலசுப்பிரமணியம் உயிரிழந்தார்.
அவரது உடலை குடும்ப உறுப்பினர்களிடன் ஒப்படைக்காமல் வேறு நபர்களிடம் திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை நிர்வாகம் மாற்றி கொடுத்தது. அந்த நபர்களும் பாலசுப்பிரமணியத்தின் உடலை பிரித்து பார்க்காமல் மின் மயானத்தில் எரியூட்டிவிட்டனர்.
இதனால் பாலசுப்பிரமணியத்தின் உறவினர்கள் மீளாத்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இச்சம்பவம் திருப்பூர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையைும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி பணியில் அலட்சியமாக இருந்த திருப்பூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.