காதலனுடன் சேர்ந்து கிணற்றில் குதித்த 10 ஆம் வகுப்பு மாணவி - கடைசியில் நிகழ்ந்த விபரீதம்
திருப்பூரில் 10 ஆம் வகுப்பு மாணவி வாலிபர் ஒருவருடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரை சேர்ந்த முரளி என்பவரது மகன் அஜய் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இச்சிறுமியை அஜய் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இந்த விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரியவந்ததால் சிறுமியைத் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையில் இருந்த சிறுமி காதலன் அஜய்யுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மாயமானார். நீண்ட நேரம் சிறுமியை காணாததால் அவரது பெற்றோர் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இதனிடையே திருப்பூர் ஆத்துப்பாளையம் செல்லும் ரோட்டில் கிருஷ்ணவீணா நகர் அருகில் தனியாருக்கு சொந்தமான பயன்பாடற்ற கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரித்த நிலையில் இறந்தது மாயமான அவிநாசி கைகாட்டி பகுதியை சேர்ந்த சிறுமி என்பது தெரியவந்தது.
மேலும் அந்த கிணற்றில் தேடியபோது அஜய்யின் உடலும் மீட்கப்பட்டது. 2 உடல்களையும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது நேற்று அதிகாலை இரு சக்கர வாகனத்தில் இருவரும் வருவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனத்தை கிணறு இருக்கும் பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் நிறுத்திவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். இறந்துபோன சிறுமி ஜெர்கின் அணிந்திருந்ததால் அவரின் உடல் முதலில் தண்ணீரில் மிதந்தது. பின்னர்தான் அஜய் உடலை தேட முடிந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.