வருடம் முழுவதும் வேலைக்கு வந்தால் தங்க மோதிரம் பரிசு - திருப்பூரில் அதிரடி அறிவிப்பு
திருப்பூரில் ஆண்டு முழுவதும் லீவு எடுக்காமல் வரும் டெய்லருக்கு, 'தங்க மோதிரம் பரிசு' வழங்கப்படும் என்ற அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா 2வது அலை குறைந்து வரும் நிலையில் திருப்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தியை முழு வீச்சில் தொடங்கியுள்ளன. இதனால் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல்வேறு வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் குவிந்து வருகின்றது.
ஆனால் தொழிலாளர் பற்றாக்குறை நிறுவனங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.குறிப்பாக ஓவர்லாக், பிளாட்லாக் டெய்லர் தேவை அதிகரித்துள்ளது. இவர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக்கொடுத்தாலும்கூட வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் டெய்லர்களை கவர்ந்திழுப்பதற்காக புதுமையான பரிசுகளை அறிவித்து விளம்பரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஒரு நிறுவனம் ஓவர்லாக் டெய்லர்கள் வாரம் முழுவதும் வேலை செய்தால், 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என தெரிவித்திருந்தது.
இதில் மற்றொரு நிறுவனம் ஒருபடி மேலேபோய் ஆண்டு முழுவதும் லீவு எடுக்காமல் வரும் ஓவர்லாக் டெய்லருக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்ற அறிவித்துள்ளது. ஆனால் பணியில் இணைவதற்கான அழைப்புகள் எதிர்பார்த்த அளவு இல்லை என பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.