சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்த மூதாட்டியிடம் இளைஞர்கள் செய்த செயல்
திருப்பத்தூரில் சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்த மூதாட்டியிடம் பணப்பையை 3 இளைஞர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் மதனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த வசந்தா என்ற 65 வயது மூதாட்டி குழந்தைகள் இல்லாத நிலையில், தனது கணவரை பிரிந்து வாழ்கிறார். இவர் வாணியம்பாடி பஜார் வீதியில் சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில் நேற்று காலை வழக்கம் போல காய்கறிகள் விற்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த 3 இளைஞர்களில் ஒருவர் ஏதோ பொருள் வாங்குவது போல பேச்சு கொடுத்து வசந்தா அசந்த நேரத்தில் அவர் வைத்திருந்த பணப்பையை பறித்து சென்றார்.
அப்போது மற்ற இரு இளைஞர்கள் பைக்கில் தயாராக இருக்க 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பணப்பையில் ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிக் கொலுசு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த வாணியம்பாடி போலீசார் தப்பியோடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.